search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்களின் விலை"

    தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரதெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் இல்லை. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பூக்கள் சாகுபடி செய்யப்படவில்லை.

    ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாக பூச்சந்தைக்கு வரக்கூடிய பூக்களின் அளவு அதிகமாகவே இருக்கிறது. முகூர்த்ததினத்தையொட்டி பூக்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது.

    நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ, கனகாம்பரம் ரூ.400-க்கும், ரூ.100-க்கு விற்ற அரளி பூ ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ ரூ.200-க்கும் விற்பனையானது.

    இதேபோல ரோஸ் பூ, சாதி அரும்பு, மருக்கொழுந்து, கோழிக்கொண்டை பூ போன்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. விலை உயர்ந்திருந்தாலும் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர். வருகிற 5-ந் தேதி வரை விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றனர். 
    ×